My Udhayam TV Interview on Rohingya Crisis


su kyi rohingyaஅவர்களை சுதந்திரமாக கொன்று குவித்து வருகின்றது ஆங் சாங் சூகியின் கொலைகார படைகள்

மியன்மாரின் ராக்ஹின் மாநிலத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலைபற்றி ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனன் தலைமையிலான குழு 2017 ஆகஸ்ட் 23ல் அதன் ஆலோசனை அறிக்கையை சமர்ப்பித்த ஒரு சில மணி நேரத்தில் மியன்மாரின் ஆயுதப் படையினர் றொஹிங்யா முஸ்லிம்களை மீண்டும் கொன்று குவிக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையான 48 மணி நேரத்தில் 100க்கும் அதிகமான முஸ்லிம்கள் வெட்டியும் குத்தியும் சுட்டும் மிகக் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷையும் மியன்மாரையும் பிரிக்கும் நாப் நதியை நோக்கி உயிரை கையில் பிடித்தவாறு ஓட்டம் பிடித்துள்ளனர்.

முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு காட்டுமிராண்டித் தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ஒரு தாயை கற்பழித்துக் கொண்டே அவரது குழந்தையின் கழுத்து வெட்டப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் ஒரு தாய் கற்பழிக்கப்படுவதை காப்பாற்ற முயன்ற அவரது ஐந்து வயது மகள் கழுத்து வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.

படைவீரர்களால் தனது கற்பு சூறையாடப்பட்ட விதம் பற்றி 14 வயதான ஒரு சிறுமி வர்ணித்துள்ளார். அடித்து கொடுமை படுத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கூட்டாக அவர் சூறையாடப்பட்டுள்ளார். “நீங்கள் பங்களாதேஷிகள். நீங்கள் இங்கு வாழக் கூடாது. இங்கிருந்து போய்விட வேண்டும. நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். உங்கள் அல்லா எங்களுக்கு என்ன செய்கின்றான் என்று பார்ப்போம்” என்று கூறிக் கொண்டே இந்தக் கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷின் எல்லைப்புற கிராமமான கும்துங் அருகே நூற்றுக் கணக்கான றொஹிங்யா முஸ்லிம்கள் குவிந்துள்ளனர். மியன்மார் தரப்பில் இருந்து தொடர்ந்து துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமே உள்ளன. அவர்கள் எல்லைப் புற காவல் படையினருக்கு பயந்து சேற்று நிலப் பகுதியில் செடிகொடிகளுக்கும் புதர்களுக்கும் நடுவே தஞ்சம் புகுந்துள்ளனர். 1990 கள் முதல் மியன்மாரில் இருந்து பங்களாதேஷ{க்கு றொஹிங்யாக்கள் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். தற்போது சுமார் நான்கு லட்சம் பேர் இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலை இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு வகையான பதற்ற நிலையையும் தோற்றுவித்துள்ளது. காரணம் ரொஹிங்யாக்கள் தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என இரு தரப்புமே கூறிவருகின்றனர்.

மியன்மார் படையினர் றொஹிங்யா மக்கள் வாழும் பகுதிகளை முற்றுகையிட்டு ஆண்களை வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர். அதன் பிறகு வீடுவீடாகச் சென்று பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகின்றனர். இந்த நடவடிக்கையின் போது தமது தாய்மாருக்கு பாததுகாப்பு வழங்க முற்படும் சிறுவர்கள் கூட துடிக்கத் துடிக்க கொல்லப்படுகின்றனர்.

இதை ஒரு போதும் தாங்கிக் கொள்ளவும் முடியாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் றாத் அல் ஹ{சேன் தெரிவித்துள்ளார். ஒரு தாயிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் சிசுவைக் கூட கத்தியால் குத்தி கொலை செய்வதை எந்த மனிதனால் தான் ஏற்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மியன்மார் இராணுவம் கடந்த ஆண்டில் நடத்திய படுகொலைகள் சர்வதேச ரீதியாக பெரும் கண்டனத்துக்கு ஆளாகியது. பொது மக்கள் கொல்லப்பட்டமை, பாலியல் வன்முறைகள், உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை என பல விடயங்கள் சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாமே மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் சர்வதேச சமூகம் வர்ணித்துள்ளது.

இந்த காட்டுமிராண்டித் தனங்களைக் கேள்விபட்டு பாப்பரசர் பிரான்ஸிஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். 2017 ஆகஸ்ட் 27ல் அவர் இந்தச் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மியன்மாரின் சிறுபான்மை இனமான ரொஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் உருக்கமான ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போது “மியன்மாரில் சமய ரீதியான சிறுபான்மையான ரொஹிங்யா சகோதர சகோதரிகள் மீதான வன்முறைகள் பற்றிய துயரமான செய்திகளை நாம் கேள்வி பட்டுள்ளோம். நான் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர்களுக்காக தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இறைவன் காப்பாற்ற வேண்டும் என நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். அவர்களுக்கு நாம் அவர்களது முழு உரிமையையும் வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார். “அவர்கள் துன்பப் படுகின்றார்கள், சித்திரவதை செய்யப்படுகின்றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள், சொந்த இடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுகின்றார்கள், ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் முஸ்லிம்களாக விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் இவ்வாறு கொடுமை படுத்தப்படுகின்றார்கள்.” என்று பாப்பரசர் வத்திக்கானில் தனது வாராந்த போதனையின் போது மேலும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலைத்தேச நாடுகளுக்கு அடிமைகளாக இருந்து சேவகம் புரியும் முஸ்லிம் நாடுகளினதும் அதன் தலைவர்களினதும் கண்டனக் குரல் எங்கே? என்பதுதான் எல்லோரும் எழுப்பும் கேள்வி. மக்கா மதீனா ஆகிய புண்ணிய பூமிகளின் காப்பாளர்களாக தங்களை பிரகடனம் செய்துள்ள சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் எங்கே? அவர்கள் மொரோக்கோவிலும் மாலை தீவிலும் உல்லாசப் பயணத்தில் மூழ்கி உள்ளனரா? அல்லது ஏனைய நாடுகளில் முஸ்லிம்களைக் கொல்லுவதில் சுறுசுறுப்பாக உள்ளனரா?

சவூதி அரேபிய ஆட்சியாளருக்கும,; இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கங்கனம் கட்டி செயற்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு வெற்றியளிக்க வேண்டும் என வாழ்த்தி பிரார்த்தனை செய்த புனித மக்காவின் இமாம் எங்கே?

இதுதான் இன்றைய முஸ்லிம் உலகின் வெற்கக் கேடான நிலை.

இன்று ரொஹிங்யா முஸ்லிம்களுக்கும் உலகின் ஏனைய பகுதி முஸ்லிம்களுக்கும் எதிரான இந்த செயற்பாடுகள் நாளை வேறு எங்கு வேண்டுமானாலும் விஸ்தரிக்கப்படலாம். இவ்வாறான நிலையில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தை கண்டிக்க வேண்டிய ஒரு மகத்தான பொறுப்பு உள்ளது. படிப்பறிவின்றி, உதவியின்றி, ஏனைய எந்த தயவும் இன்றி கொடுமைகளுக்கு ஆளாகியுள்ள சகோதர முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய மகத்தான பொறுப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ளது.

நாடு முழுவதும் குத்பா பிரசங்கங்களின் போது ரொஹிங்யா முஸ்லிம்களின் நிலைமையை இந்த நாடு அறியச் செய்ய வேண்டிய காலம் இதுவல்லவா? ரொஹிங்யா முஸ்லிம்களைப் பற்றி மட்டும் அல்ல இலங்கை முஸ்லிம்களின் நிலை உற்பட உலக முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றி பேச வேண்டிய காலம் இதுவாகும். பலம் மிக்க உள்ளுர் மற்றும் சர்வதேச சக்திகளின் இனவாத அச்சுறுத்தல்களுக்கு நாமும் ஆளாகி உள்ளோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

துரதிஷ்டவசமாக முஸ்லிம் அரசியல் வாதிகள் ஊழலில் சிக்கி விலைபோனவர்களாகக் காணப்படுகின்றனர். உலமாக்கள் என தம்மை அழைத்துக் கொள்பவர்கள் வரலாற்று கால தமது சிந்தனைகளில் இருந்து இன்னமும் விடுபடாதவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலும் உலகில் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை இவர்கள் அறிந்து கூட இருக்க மாட்டார்கள்.

நீண்டகாலமாக தனது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் பற்றி இன்னமும் வாய்திறக்காமல் மௌனம் காக்கும் மியன்மாரின் ஆட்சியாளர் ஆங்சோங் சூகி தற்போது சில மேலைத்தேச வாதிகளால் கூட விமர்சிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலை சூகி நியாயப்படுத்தியதை அடுத்து அவர் பலத்த கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். ஐ.நா முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு கூட சூகி தடை விதித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

றாக்ஹின் மாநிலம் தொடர்பாக கொபி அனான் தலைமை தாங்கிய ஆலோசனை குழு பாரபட்சம் அற்ற இயல்பான ஒரு குழுவாகக் காணப்பட்டது. அந்த மாநிலத்தில் உள்ள சகல மக்களதும் நன்மைகளைக் கருத்திற் கொண்டு பல ஆலோசனைகளை அது முன்வைத்துள்ளது. ஆறு உள்ளுர் மற்றும் மூன்று சர்வதேச நிபுணர்களை அது உள்ளடக்கியுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் ஒரு வருட காலாக அது நடத்திய விசாரணைகள் மற்றும் தேடல்களின் பின் ஆகஸ்ட் 23 ல் இந்தக் குழு தனது இறுதி ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது. வன்முறைகளை தடுக்கவும் சமாதானத்தை நிலைநிறுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பல்வேறு தரப்புக்களிலும் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இது ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

“அரசாங்கத்தின் தலைமையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் பங்களிப்போடு ஒருங்கிணைக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இன்னொரு வன்முறையும் மூர்க்கத்தனமும் மீண்டும் அரங்கேறும் ஆபத்து உள்ளது. அது இந்த மக்களை மேலும் வறுமை நிலைக்கு இட்டுச் செல்லும்” என்று கொபி அனன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நேர்மையான ஆக்கபூர்வமான சிபார்சுகளை இந்த குழு முன்வைத்தள்ளது. இது நிச்சயம் விவாதங்களை ஏற்படுத்தும் என்பதையும் நாம் அறிவோம் என்று கொபி அன்ன தெரிவித்துள்ளார். ஆனால் நாம் என்ன நோக்கத்தில் அதை செய்துள்ளொம் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை அமுல் செய்தால் எமது சிபார்சுகள் மற்றும் இடைக்கால அறிக்கைகள் என்பனவற்றின் மூலம் சாசுவதமான சமாதானத்தை ஏற்படுத்தலாம்  என நான் உறுதியாக நம்புகின்றேன். இந்த அமைதியானது றாக்ஹின் மாலத்தில் சட்டத்தின் கௌரவத்துக்கும் அபிவிருத்திக்கும் வழி வகுக்கும் என்று அனன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் மியன்மார் படைகள் மீண்டும் காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்த காட்டு மிராண்டிகள் சமாதானத்தில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றார்கள் என்பதை அனனுக்கும் அவர் குழுவுக்கும் மட்டுமன்றி முழ உலகுக்கும் பறைசாற்றுவதாக இது அமைந்துள்ளது. நாம் அறிக்கைகள் பற்றியோ அவற்றை வெளியிடுபவர்கள் பற்றியோ எந்த கரிசனையும் அற்றவர்கள். எமது இலக்கு அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிப்பது மட்டுமே என்பதுதான் இந்த காட்டுமிராண்டிகள் உலகுக்கு அனுப்பியுள்ள செய்தி

(முற்றும்)