My Udhayam TV Interview on Rohingya Crisis


rohi12உலகம் முழுவதும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மியன்மார் றோஹிங்யா முஸ்லிம்களின் மனிதாபிமான நிலை குறித்து இலங்கையின் மௌனம் அதிர்ச்சி அளிக்கின்றது

ஆசியாவின் மிகவும் பயங்கரமான அபாயம் என வர்ணிக்கப்படும் மியன்மாரின் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அந்த நாட்டு அரசின் அனுசரணையோடு மேற்கொள்ளப்படும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று உலகில் மனிதாபிமானத்துக்கு எதிரான மாபெரும் இனவாத நடவடிக்கையாக நோக்கப்படுகின்றது. இஸ்ரேல் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைத் தவிர பெரும்பாலும் ஏனைய எல்லா நாடுகளும் இதை வன்மையாகக் கண்டித்துள்ளன.

அண்மைக் காலங்களில் இலங்கையில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ள மேலைத்தேச நாடுகளில் குண்டு வெடிப்புக்களும் ஏனைய தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்ற போது இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உற்பட வெளிவிவகார அமைச்சும் முண்டியத்துக் கொண்டு அந்த சம்பவங்களின் பின்னணி என்ன யார் காரணம் என்பன பற்றிய முழு விவரங்கள் வெளியாவதற்கு முன்பே அவற்றைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நமக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு நாட்டில் ஆண், பெண், சிறுவர் என வயது வித்தியாசமோ அல்லது பால் வித்தியாசமோ இன்றி மக்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். சொந்த இடங்களில் இருந்து கதறக் கதற விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் இன்னொரு அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் நல்லாட்சியின் காதுகளுக்கு இன்னும் இந்த மக்களின் அவலக் குரல்கள் எட்டவில்லை. உலகையே கண்கலங்கச் செய்யும் காட்சிகள் இந்த நல்லாட்சிக்கு மட்டும் இன்னும் தெரியவில்லை. நல்லாட்சி ஒரு புறம் இருக்கட்டும் இந்த நாட்டின் தொழில்வான்மையாளர்கள், புத்தி ஜீவிகள், கலைஞர்கள், சிவில் சமூகத்தினர், மகளிர் அமைப்புக்கள் என இவர்களுக்கும் இந்த மனித ஓலங்கள் இன்னும் கேற்கவில்லையா? இந்த மனித அவலங்கள் இன்னும் தெரியவில்லையா?

உயிரைக் காப்பாற்றவும் மானத்தைக் காப்பாற்றவும் அழிவுகளில் இருந்து தப்பவும் பங்களாதேஷ் நோக்கி வரும் மக்கள் தனது நாட்டுக்கு ஒரு மேலதிக சுமையாக மாறிவிடுவார்கள் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். அப்போது பங்களாதேஷில் வாழும் பௌத்தர்கள் பௌத்த போதனைகளுக்கும் பாஸிஸ வாதத்துக்கும் இடையிலான வேறுபாட்டை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர்.

பங்களாதேஷில் உள்ள பௌத்த அமைப்பான சம்மிலித்தோ பௌத்த சமாஜ் என்ற அமைப்பின் அழைப்பாளர் சுத்தானந்த மகா தேரோ றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனஒழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி விடுங்கள் என மியன்மார் அரசிடம் உறுக்கமானதோர் வேண்டுகோளை விடுத்துள்ளார். பங்களாதேஷில் வாழும் பௌத்தர்களின் உணர்வுகளை இது பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படும் கொடூரங்கள் புத்த பிரானின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கொடுமைகளுக்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் பங்களாதேஷில் வாழும் பௌத்தர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பௌத்தர்களால் வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பௌத்த திருவிழா ‘புரோபோறோன பூர்ணிமா’ விழாவாகும். பௌத்தர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது பெரிய திருவிழாவாக இது கருதப்படுகின்றது. இம்மாதம் ஐந்தாம் திகதி கொண்டாடப்படவுள்ள இந்த விழாவின் போது வர்ண விளக்குகளை ஏற்றப் போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதற்காகவும் விழாவின் ஏனைய அம்சங்களுக்காகவும் செலவிடவுள்ள தொகையை இவ்வருடம் பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ள றோஹிங்யா முஸ்லிம்களின் நலன்களுக்காக செலவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.moscow

கடந்த மாதம் முழுவதும் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை உலகம் முழுவதும் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற டைம் சஞ்சிகையால் ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ என வர்ணிக்கப்பட்டுள்ள பௌத்த தீவிரவாதியான அசின் விராத்து தேரரின் வெறுப்பூட்டும் பேச்சுக்களால் சுய மதி இழந்து தூண்டப்பட்டுள்ள மியன்மார் இராணுவமும் அவர்களின் துணைப்படையான காடையர் கும்பல்களும் தான் இந்த தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளளன.

இதை இலங்கையிலும் உறுதி செய்யும் வகையில் இங்குள்ள பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் திரண்ட பௌத்த தீவிரவாதிகள் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் றோஹிங்யா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு இல்லத்தை சுற்றி வளைத்து தமது வெறித்தனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். செப்டம்பர் 26ம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது இந்த ஐ.நா பாதுகாப்பு இல்லத்துக்கு பலத்த சேதம் ஏற்யடுத்தப்பட்டுள்ளது. இந்த அப்பாவி மக்கள் உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அவர்கள் கூச்சலிடுகின்றனர்.

அச்சத்துககுள்ளான றோஹிங்யா மக்கள் தற்போது தென் பகுதியில் உள்ள பூஸா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்னர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளை விட்டு விட்டு சில சில்லறை நபர்களை பொலிஸார் பெயரளவில் கைது செய்துள்ளனர். இது ஐ.நா அலுவலகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சியாகும். பூஸா முகாம் பாதுகாப்பான ஒரு பிரதேசமாக இருக்கலாம். ஆனால் அதனைச் சூழவுள்ள பகுதிகள் இந்த மக்களுக்கு எந்தளவு பாதகாப்பானவை என்பது கேள்விக்குறியதாகும். (பண்டாரவளை பிந்துனுவௌ முகாம் சம்பவத்தை இங்கு நினைவூட்டுவது பொருத்தமானதாகும். இந்தச் சம்பவம் இடம்பெற்றது 2000மாம் ஆண்டு அக்டோபார் மாதம் என்பதும் இங்கு நினைவூட்டத்தக்கது) உள்நாட்டு சட்டங்களை மட்டும் அன்றி சர்வதேச சட்டங்களைக் கூட பட்டப்பகலில் பகிரங்கமாக மீறும் அளவுக்கு இந்தக் காடையர் கூட்டம் நடந்து கொண்டும் கூட இன்னமும் அவர்களுக்கு எதிராக உருப்படியாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தச சம்பத்தை காரணமாக வைத்துக் கொண்டே இவர்களுக்கு இங்கே பாதகாப்பு இல்லை எனவே அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கே திருப்பி அனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. மரணத்தின் பிடியில் அவர்களை இலங்கை அரசே ஒப்படைக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் மீதும் றோஹிங்யாக்கள் மீதும் குறை கூறுவதற்கான காரணங்களை வெளிநாட்டு ஆலோசனைகளுடன் தேடுவதற்கு பதிலாக இலங்கையில் அதிகரித்து வரும் தீவிரவாத வன்முறை அச்சுறுத்தல்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சின் கருத்தரங்குகளில் கலந்துரையாட வெற்கப்படத் தேவையில்லை. செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்ற அந்த நாள் தொடக்கம் அமெரிக்கா தலைமையிலான மேலைத்தேச யுத்த இயந்திரத்தின் ஒரு பகுதியான மேலைத்தேச ஊடகங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக விரிவாக பல விடயங்களை தொடராக தொகுத்து வழங்கி வந்தன. ஆனால் மியன்மார் பற்றியோ அங்கு இடம்பெறும் கொடுமைகள் பற்றியோ இந்த ஊடகங்களோ அல்லது அவர்களின் சகாக்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

chechசர்வதேச அரங்கில் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கொடுமைக்கு எதிராக முதலில் குரல் கொடுத்த உலகத் தலைவர் பாப்பரசர் பிரான்ஸிஸ். நோபள் பரிசு வென்ற இந்தியரான அமர்தியா சென் மியன்மார் முஸ்லிம்கள் மீதான இந்தக் கொடுமைகளை சகிக்க முடியாத ஒரு காட்டுமிராண்டித் தனம் என வர்ணித்திருந்தார். உலகப் புகழ் பெற்ற பல கல்விமான்களும் புத்தி ஜீவிகளும் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். மியன்மாரின் றாக்கின் மாநிலத்தில் இடம்பெறும் இந்தக் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் பாதகாப்புச் சபை தலையிட வேண்டும் என்ற கூட்டு வேண்டு கோள்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

பல நாடுகளும் அரசுகளும் மக்களும் மக்கள் அமைப்புக்களும் இந்த அட்டூழியங்களை மிக்க கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் கண்டித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அலட்சியமாகவே உள்ளது. பிரதான பிரிவு ஊடகங்கள் கடமைக்காக ஒரு சில பந்திகளை பிரசுரித்து விட்டு மௌனம் காக்கின்றன. முஸ்லிம் பெயர்களையுடைய நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை இலங்கை ஊடகங்கள் தவறாமல் பதிவு செய்து வந்துள்ளமை இங்கு குறிப்பாக அவதானிக்கத் தக்கதாகும். ஆனால் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அந்தளவு முக்கியத்தவம் வழங்கப்படுவதில்லை.

பாப்பரசரின் கண்டனத்தை தொடர்ந்து 72 மணிநேரத்தில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டானியோ கட்டரஸ் றோஹிங்யா மக்களுக்கு உதவ மனிதாபிமான நிறுவனங்களுக்கு வழிவிடுமாறு மியன்மார் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இனஒழிப்பு என்றால் என்ன என்று ஒரு பாடப்புத்தகத்தில் கூறப்படும் உதாரணம் போல் இந்தச் சம்பவங்கள் காணப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இதை வர்ணித்திருந்தார்.

ஐரோப்பாவில் செயற்படும் றோஹிங்யா சபையின் பெண் பேச்சாளர் அனிடா ஸ்குக் ‘இது மெதுவாக எரியும் இன ஒழிப்பு’ என வர்ணித்துள்ளார். இந்த மரணங்களுக்கு பின்னணியில் மியன்மார் இராணுவமே உள்ளது என அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ள கொளரவத்துக்குரிய பௌத்த மதத் தலைவர் தலாய்லாமா மியன்மாரின் ஆட்சியாளர் ஆங்சாங் சுகிக்கு இவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஒரு பௌத்த நாடு என்ற ரீதியில் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கின்றது என்று தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் தன்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் பலருக்கு என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்ற ரீதியலும் தலாய் லாமாவின் கருததுக்;கள் அமைந்துள்ளன.

மியன்மார் மக்கள் மத்தியில் சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்தி சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஸ்தாபிக்கும் வகையில் சமூகத்தில் சகல தரப்பினருடனும் உறவுகளை ஏற்படுத்துமாறு தலாய் லாமா ஆங்சோங் சூகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்த பிரான் இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்திருப்பாராயின் உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கும் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தான் இருந்திருப்பார் என்று உலகில் மிகவும் கௌரவத்துக்குரிய பௌத்த மதத் தலைவரான தலாய் லாமா கவலையோடு தெரிவித்துள்ளார்.rohing mom

அவர் அத்தோடு நிற்கவில்லை. சுமாதானத்துக்கான நோபள் பரிசு வென்ற உலகின் கீர்த்திமிக்க பிரமுகர்கள் மற்றும் தென் ஆபிரிக்காவின் அதிமேற்றிறாணியார் டெஸ்மன்ட் டுடு ஆகியோருடன் இணைந்து றோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு ஆங் சோங் சூகிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் மியன்மார் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த கடுமையான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான எண்ணத்துடன் தான் இந்த வேண்டுகோளை விடுத்தாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

மியன்மார் முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களை எரித்து அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கையில் மியன்மார் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் நேரடியாகச் சாடியுள்ளார். வன்முறைகள் நடந்த இடத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் மியன்மார் முஸ்லிம் அகதிகள் பற்றிய படங்கள் அமெரிக்க மக்களை அதிர்ச்சியல் உறைய வைத்துள்ளதாக பாதுகாப்புச் சபையில் பேசும் போது அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. மனதைச் சிதற வைக்கும் வகையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இது கடைசியில் இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகளின் பேதே மைக் பென்ஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் சூகியுடன் நேரடியாக தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மனிதாபிமான உதவிகளுக்கு வழிவிடுமாறும் கேட்டுள்ளார். ஆகஸ்ட் 25ல் மியன்மார் பிரச்சினை தொடங்கியது முதல் பாதுகாப்புச் சபை இரண்டு தடவைகள் இரகசிய கூட்டங்களை நடத்தியுள்ளது. கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்ட பாதகாப்புச் சபை மியன்மார் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ளதோடு வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மியன்மார் அதிகாரிகளையும் அது கேட்டுள்ளது.

செப்டம்பர் 20ம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் அந்த நாட்டின் வுஆஊ தொலைக்காட்சி சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இனச் சுத்திகரிப்பை வெளிப்படுத்தும்; இன ஒழிப்பு நடவடிக்கைகளை கண்டிப்பதற்கு பாதுகாப்புச் சபையின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவேன்’ என்று தெரிவித்துள்ளார். அவர் இனஒழிப்பு என்ற வார்த்தையை பிரயோகித்திருப்பது மியன்மார் இராணுவத்தின் மீதான அவரின் பலத்த கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவே கருதப்படுகின்றது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் செப்டம்பர் 28ம் திகதி வரை மியன்மாரில் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வெளியேறியுள்ளனர். உயிரைப் பாதுகாக்க இவர்ள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகு;துள்ளனர். தற்போது இடம்பெற்று வரும் இனவாத சுத்திகரிப்புச் செயற்பாட்டை நாம் மிக வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் மியன்மார் ஆட்சியாளர் சூகியின் நிலைப்பாடு மனித உரிமை குழுக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஜுன்டாவால் 15 வருடங்களுக்கு மேல் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவருக்காக குரல் கொடுத்த அமைப்புக்கள் தான் இவை. இவர்கள் தான் சூகியின சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகவும் பிரசாரங்களை முன்னெடுத்தவர்கள்.

றோஹிங்யா முஸ்லிம்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் துருக்கி ஜனாதிபதி தய்யிப் எர்டொகன் முன்னணியில் இருந்து செயற்படுகின்றார். இந்த மக்கள் இன ஒழிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்ற நிலைப்பாட்டையே அவரும் கொண்டுள்ளார். இந்தோனேஷியா தனது வெளிவிவகார அமைச்சரை மியன்மாருக்கு அனுப்பி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுள்ளது.

ஆனால் மத்திய கிழக்கில் ஆட்சியில் இருக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூலிப்படைகளான சர்வாதிகார ஆட்சியாளர்கள் மட்டும் இந்த விடயத்தில் இன்னமும் மௌனம் சாதிக்கின்றனர். யெமனிலும் சிரியாவிலும் ஏனைய நாடுகளிலும் முஸ்லிம்களைக் கொல்லுவதற்காகவே சவூதி அரேபியா தனது எஜமானர்களிடம் இருந்து 120 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்கின்றது. ஆனால் றோஹிங்யாக்களுக்காக 15 மில்லியன் டொலர்களை மட்டுமே அது ஒதுக்கி உள்ளது. இது தான் இன்றைய முஸ்லிம் உலகின் மிகவும் வெற்கக் கேடான கேவலமான ஒரு நிலையாகும்.

(முற்றும்)