அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவராக றிஸ்வி மௌலவி மீண்டும் தெரிவு

அது முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் தார்மிக வங்குரோத்து நிலையை புலப்படுத்துகின்றது

அடிக்கடி கிளப்பும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்குப் பேர் போன றிஸ்வி மௌலவி மீண்டும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (உலமா சபையின்) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது முஸ்லிம் சமூகத்தின் சமய ஒழுக்க மற்றும் தார்மிக விழுமியங்கள் சாந்த விடயங்களில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

சர்ச்சைக்குரிய விதத்தில் இருபது வருடங்களுக்கு முன் உலமா சபையின் அன்றைய தலைவர் றியால் மௌலவியை வெளியேற்றி விட்டு பலவந்தமாக அதைக் கைப்பற்றி உலமா சபையை ஒரு தனிநபர் காட்சிக் கூடமாக மாற்றியது முதலே இது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

மத்ரஸா கல்விமுறையை முடித்துக் கொண்டு வெளியே வந்தவர்களின் கூடம் தான் உலமா சபை. முஸ்லிம் சமூகத்துக்காக குரல் எழுப்பும் எந்த மக்கள் ஆணையும் அதற்கு வழங்கப்படவில்லை. சமூகம் அவர்களுக்கு அந்த அதிகாரத்தையும் வழங்கவும் இல்லை.

இஸ்லாத்தில் குருத்துவம் என்பது கிடையாது. இஸ்லாமியக் கல்விமான்கள் எம்மிடம் உள்ளனர். இன்று பல முஸ்லிம் கல்விமான்கள் உள்ளனர் அவர்கள் யாரும் உலமா சபையின் உறுப்பினர்கள் அல்ல. முக்கியமான சமய விடயங்களில் அவர்களின் சுதந்திரமான கருததுக்களுக்கும் குரல்களுக்கும் செவி சாய்க்கப்படுவதும் இல்லை.

1920களில் முக்கியமான சமய விடயங்களில் எளிமையான கௌரவமான சமயப் பிரமுகர்கள் வழிகாட்டியாக இருந்தனர். அவர்கள் தான் உலமா சபையை நிறுவினர். றிஸ்வி மௌலவி தலைவராக வரும்வரை இந்த நிலை நீடித்தது. அதன் பிறகு அவர் தன்னை முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் அரசியல் தலைவராக காட்டிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார். ஆனால் உண்மையில் அதற்கான தகுதி அவருக்கு இல்லை. அரசியல் மற்றும் சமய ரீதியாகத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதில் அவர் கிட்டத்தட்ட ஒரு பாப்பரசரைப் போல் நடந்து கொள்ளும் முயற்சிகளையே மேற்கொண்டார்.

இன்று உலமா சபை ஆமாம் சாமிகளின் கூடாரம் ஆகிவிட்டது. யாரும் அவரை எதிர்த்துக் கேள்வி கேற்பதில்லை. தேவையற்ற சாச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்வதில் பேர்போன தலைவர் றமழான் மற்றும் பெருநாள் பிறை விவகாரங்களைக் கூட முறையாகக் கையாளத் தெரியாத ஒருவராவார். இவர் அவ்வப்போது ஏற்படுத்திய குழப்பங்கள் யாவும் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாகவே அமைந்தன. இவற்றைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கள இனவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தவறான பிரசாரங்களையே முன்னெடுத்தச் சென்றனர்.

சமூகத்துடன் எந்த விதமான ஆலோசனைகளிலும் ஈடுபடாத உலமா சபை பிரச்சினைகளை இரட்டிப்பாக்கியது. இவற்றுள் மிகவும் பாரதூரமானது ஹலால் விடயம். இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் வாழுகின்றனர். உணவுப் பழக்கத்தைப் பொருத்தமட்டில் ஹலால் எது ஹராம் எது என்பதைப் பிரித்துப் பாhப்பதில் அவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுத்ததில்லை. உலமா சபை ஹலால் விடயத்தை முற்று முழுதாக வர்த்தக நோக்கிலேயே கையாண்டது. இதனால் தான் மற்ற சமூகங்கள் ஆத்திரமடைந்தன.

ஹலால் சான்றிதழ் விடயத்தில் தொடங்கி பெண்களின் முகம் மூடும் விடயத்திலும் அது கட்டாயமானது என்று தான் அவர் கூறினார். ஆல்குர்ஆனோ அல்லது அல் ஹதீஸோ வலியுறுத்தாத போதிலும் அவர் அதை வலியுத்தினார். இது சமூகத்தக்கு பெரும் அழிவைக் கொண்டு வந்ததோடு சமூகத்தை கேலிக்குரியதாகவும் ஆக்கியது. காலத்தின் தேவைக்கு ஏற்ப ஷரீஆ சட்டங்களுக்கு இசைவாக மத்ரஸா முறைகளை மாற்றி அமைக்கத் தவறியதன் மூலம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சரியான சீர்திருத்தங்களை அமுல் செய்யத் தவறியதன் மூலம் இந்த நிலை மேலும் வியாபித்தது.

அவர் செய்த மிக மோசமான மிக ஆபத்தான மிகவும் துரோகமான காரியங்களில் ஒன்றுதான் 2009 மே மாதத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு வக்காளத்து வாங்கி ஜெனீவா சென்றமை. தன்னுடைய சுய நலன்களுக்காக மகிந்த ராஜபக்ஷவுக்கு மகிழ்வூட்டும் முயற்சியில் ஜெனீவா விவகாரத்துக்கும் முஸ்லிம் சமூகத்தக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை முஸ்லிம் சமூகம் மேலும் வேதனைக்கு உற்படுத்தியது போல் ஆனது.

ஈரானில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின் ஆயத்துல்லாஹ் கொமேய்னியின் வளர்ச்சியை மட்டம் தட்டும் வகையில் சவூதி அரேரபியா பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு வழிகளில் அதன் வஹ்ஹாபிஸத்தை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. அதன் மூலம் தன்னை முஸ்லிம்களின் தலைவனாக காட்டிக் கொள்ள சவூதி அரேபியா முனைந்தது. இதனால் மற்ற சமூகங்களின் வெறுப்பையும் பொருட்படுத்தாமல் முஸ்லிம்களுக்கான தனி ஆடை கலாசாரம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் இந்தப் பழக்கம் அமுலுக்கு வந்தது. சமூகத்தில் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள அவருக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமயப் பரிவை மட்டும் ஊக்குவித்தல், செல்வந்த வர்த்தகர்களோடும் அரசியல்வாதிகளோடும் கூடிக் குலாவுதல், செல்வந்த வளைகுடா நாடுகளின் நிகழ்ச்சி நிரலை இந்த நாட்டில் அமுல் செய்தல், அடிக்கடி வெளிநாட்டில் சுற்றுப் பயணம் என்பன உற்பட இன்னும் பல விடயங்களில் அவர் தனது காலத்தைக் கழித்து தன்மீது சுமத்துப்பட்டிருந்த சமூகப் பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துள்ளார். இந்த விடயத்தில் அவர் ஒரு தோற்றுப் போன நபராகவே காணப்படுகின்றார்.

1948 முதல் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகள் முஸ்லிம் சமூகத்தின் சமூக விடயங்களில் தலையிடவில்லை. மாறாக அவர்கள் முஸ்லிம்களின் சமய ரீதியான உரிமைகளை மதித்தனர். சிங்கள அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பக்கள், ஏன் மதகுருமார்கள் கூட சமய உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்தனர். இனவாத கூலிப்டையில் ஒரு சிலர் தான் இருந்தனர். அவர்கள் தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபட்டனர். முகம் மூடுவதைத் தடை செய்யும் முன் முஸ்லிம் சமூகத்தை கலந்து ஆலோசனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்த பௌத்த மதகுருமாரும் உள்ளனர்.

எவ்வாறேனும் சமூகம் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளில் உலமா சபையின் ஒட்டு மொத்த அலட்சியம் முஸ்லிம்களின் சமய உரிமைகளில் அரசும் அதன் கூலிப்பட்டாளமும் தலையிடும் நிலைமையை உருவாக்கியது. இதன் விளைவு இன்று மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதி முகம் மூடுவதைத் தடை செய்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கான திருமண வயதெல்லையும் 18ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு எல்லாம் அப்பால் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின் மைத்திரி ரணில் அரசு முன்னொருபோதும் இல்லாத வகையில் முஸ்லிம்கள் மீது அடாவடித்தனத்தை கட்டவிழத்து விட்டுள்ளது. முஸ்லிம்கள் ஒரு சமூகம் என்ற வகையில் தங்களது இருப்புக்கே சவாலாக இருக்கின்றனர் என்ற ரீதியில் இன்று பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காடையர் கும்பல்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்த அரசால் இதுவரை எடுக்கப்படவில்லை. முஸ்லிம்கள் இந்தத் துயரங்களில் மூழ்கியிருந்த வேளையில் ஜுன் மாதம் 3ம் திகதி ஜனாதிபதியின் இப்தார் விருந்தில் றிஸ்லி மௌலவி மகிழ்வோடு பங்கேற்றார். அப்போது இந்த நாட்டு முஸ்லிம்கள் பல இடங்களில் தமது வீடு வாசல்களில் இருந்து வெளியே வரக் கூட முடியாமல் அச்சத்தில் மூழ்கிப் போய் இருந்தனர். முஸ்லிம்களுக்க எதிரான ரதன தேரரின் உண்ணாவிரத நாடகத்தின் போது கண்டியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சத்தில் உறைந்து போய் இருந்தனர்.

இவருடைய செயற்பாடுகள் குறித்து நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கோபத்தில் இருந்தனர். ஆனால் இவற்றைத் தடுப்பதற்கான எந்த உதவியும் இன்றி அவர்கள் இருந்தனர். காரணம் றிஸ்வி மௌலவியின் குழப்பங்கள் ஏராளம்.

உயிர்த்தஞாயிறு சம்பவங்களோடு முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அரசும் அதன் கூலிப்பட்டாளமும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டன. அமைதியையும் சமாதானத்தையும் நேசிக்கும் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை அது சொல்லொனா துயரங்களுக்கு ஆளாக்கியது.

அரசாங்கத்தினதும் எதிர்க்கட்சியினதும் கூட்டு முயற்சியில் தான் இந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது இன்று தெளிவாகப் புலனாகி உள்ளது. இனவாத பௌத்த பிக்குமார், இனவாத ஊடகங்கள், இனவாத அரச இயந்திரம், இனவாத வர்த்தகர்கள் என எல்லோரும் இந்த விடயத்தில் முஸ்லிம்களை நசுக்க மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏப்பிரல் 21 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களும் பிரசாரங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் விஷமத்தனமான எண்ணங்களைத் தூண்டிவிடும் விடயத்தில் நன்கு செயற்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட காடையர்களுக்கு இந்த விடயத்தில் பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதன் விளைவை குருணாகல் மாவட்டம் மினுவாங்கொடை மற்றும் ஏனய இடங்களிலும் நாம் காண முடிந்தது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் இருந்த வேளையில் முஸ்லிம் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டு அப்பாவி உயிர்களும் பறிக்கப்பட்டன. ஜனாதிபதி சிறிசேன இவற்றை அறிந்திருந்தார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவற்றைத் தடுக்கத் தவறி விட்டார். இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிய அவர் அந்தக் காலப் பகுதியில் எந்த முக்கியத்தவமும் அற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு பறந்து விட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பலர் தற்போது பிணையில் விடவிக்கப்பட்டுள்ளனர். திகண சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஒரு பிரபலமான கேடி சிறைக்கு வெளியே மாலை சூடி வரவேற்கப்பட்டார்.

இன்றைய நிலைமைகள் பற்றி ஒரு பத்தி எழுத்தாளர் இவ்வாறு வர்ணித்துள்ளார். “சாதாரண மக்களின் அன்றாட வாழ்ககை சங்கடம் மிக்கதாக ஆகிவிட்டது. இந்த நாட்டு முஸ்லிம்களின் வாழ்க்கைப் போக்கு இப்போது பெரும்பாலும் மாறி வருகின்றது. நெருக்குதல், பாரபட்சம், நன்கு திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரசாரம் என்பன பொது அரங்கில் நன்கு உருவெடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான மனநிலைகளை இவை பெருமளவில் உருவாக்கி உள்ளன. இனவாதம் இலங்கையில் புதிய அர்த்தத்தைப் பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு சொந்தமான எல்லாமே இலக்கு வைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முஸ்லிம்கள் முழு அளவில் நெருக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். பொதுப் போக்குவரத்துக்கள் வாடகைப் போக்குவரத்துக்கள் வேலை செய்யும் இடங்கள் என எல்லா இடங்களிலும் இது தொடருகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களுக்காக ஆஜராக சிங்கள சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர். முஸ்லிம்களுக்கு மருத்துவம் பாhக்க சிங்கள வைத்தியர்கள் மறுத்துள்ளனர். சில இடங்களில் முஸ்லிம் பெண்கள் தமது முக்காட்டை நீக்கினால் தான் மருத்துவம் செய்ய முடியும் என வற்புறுத்தி உள்ளனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கின்றனர். முஸ்லிம்கள் தனது பிரதேச சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது என பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். முஸ்லிம்களோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக் கொள்ள வேண்டாம் என சில பௌத்த ஆலயங்களில் போதனை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று மகாநாயக்கர் ஒருவரே தெரிவித்தார். இவ்வாறு எல்லாமே முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பப்பட்டு சென்று கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மூல காரணம் அமெரிக்க இஸ்ரேல் யுத்த வெறியர்களால் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இஸ்லாமோபோபியா அல்லது இஸ்லாத்துக்கு எதிரான அதீத அச்சம். இது அதன் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. அதன் விளைவாக முஸ்லிம்கள் ஒரு கோணத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரசாரம் எந்தளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதென்றால் ஒரு முஸ்லிம் நிறுவனம் பிரபல அரச ஆஸ்பத்திரிகளுக்கு அருகில் அங்கு சிகிச்சை பெறவரும் ஏழை மக்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக விநியோகித்து வந்த இலவச உணவுத் திட்டத்தையும் இந்தப் பிரசாரத்தின் மூலம் சந்தேகத்துக்கு உரியதாக்கி இப்போது அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினசரி சகல இனங்களையும் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஏழை நோயாளிகளும் அவர்களைப் பார்வையிட வரும் உறவுகளும் இன்று பட்டினியோடு திரும்பிச் செல்லுகின்றனர்.

இவ்வாறான ஒரு மோசமான பின்னணியில் தான் இனங்களுக்கு இடையிலான பிளவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இன்றைய தலைவர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் முஸ்லிம்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களின் கடைகளுக்கு செல்ல வேண்டாம் அவர்களால் வழங்கப்படும் எந்த ஒரு உணவையும் உற்கொள்ள வேண்டாம் என்று பொது மேடையில் பகிரங்கமாகக் கூறினார்.

சுமார் ஆயிரம் அண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஏப்பிரல் 21 தாக்குதலின் பின் முன்னொரு போதும் இல்லாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான சக்தி மிக்க உள்ளுர் மற்றும் சர்வதேச பிரசாரப் பிரிவுகளும் செயற்பாட்டுப் பிரிவுகளும் தற்போது இந்த நாட்டில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. அவர்கள் கூட்டாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சதிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் உலமா சபை கௌரவம் மிக்க திறமை மிக்க ஆற்றல் மிக்க புத்தி ஜீவிகளையும் கல்விமான்களையும் கொண்டு மீளக் கட்டமைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும். இவர்கள் இஸ்லாமிய போதனைகளின் கீழ் முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சமூக நன்மைக்கும் நாட்டு நன்மைக்குமாக சுயநலன்களைக் கடந்து பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சமூகங்களை ஒன்றிணைப்பதில் அவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். ஏனைய சமூகங்களின் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் வெல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடையை முஸ்லிம்களின் சமகால விடயங்கள் பற்றிப் பேசுவதற்காகப் பயன்படுத்தும் ஆற்றலும் திட்டமிடலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டுத் தூதரகங்களில் தஞ்சம் புகுந்து அவர்களால் வழங்கப்படும் பணத்துக்காக அவர்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுபவர்களாக இருக்கக் கூடாது.

கடும் இருள் சூழ்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் அழுத்தமான ஒரு தேவை உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு ஒரு கடப்பாடு உள்ளது. நடந்து முடிந்த விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்ற விடயங்கள் பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதன் மூலம் கடந்த கால தவறுகள் அடையாளம் காணப்பட்டு திருத்தப்பட வேண்டும். தற்போது தோற்றம் பெற்று வரும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய விதத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களோடு முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய சூழல் கட்டி எழுப்ப்பட வேண்டும்.

இதை செய்ய மறுப்பதோ அல்லது தாமதிப்பதோ பாரிய நாசத்தை உண்டுபண்ணக் கூடும். காரணம் எதிர் சக்திகள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு வருகின்றன.
இனவாத அரசியல்வாதிகளும் அவர்களின் கூலிப்பட்டாளமும் கூரைக்கு மேல் நின்று கோஷம் எழுப்பலாம். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபடலாம். ஆனால் இந்த நாடும் நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமானால் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் யாவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே யதார்த்தமாகும். (முற்றும்)