yemen 23மனித குல அழிவின் நினைவுச் சின்னமாக மாறியுள்ளது

அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகளுடன் சவூதி அரேபியா நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது யெமனில் அது மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது கசிந்துள்ள தொடரான பல ஈமெயில் தகவல்கள் தெரிவிக்கின்றன. யெமன் முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்ட சிற்பியான சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் யெமன் யுத்தத்தில் இருந்து தான் வெளியேறிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மோதலில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை தான் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2015ல் முஹம்மத் பின் சல்மான் அபு தாபியின் முடிக்குரிய இளவரசரும் பாதுகாப்பு அமைச்சருமான முஹம்மத் பின் செயித்தின் துணையோடு யெமனில் விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களை தொடங்கினார். இதன் விளைவு இன்று அந்த நாடு ஒரு வெற்று பூமியாக மாற்றப்பட்டுள்ளது. சவூதி தலைமையிலான கூட்டணி யெமனின் ஒவ்வொரு நகரங்களையும் ஒவ்வொரு கிராமங்களையும் அடுத்தடுத்து மயான பூமி ஆக்கியது. ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள, கைத்தொழில் பேட்டைகள், சந்தைகள், வீடுகள், வீதிகள், பாலங்கள, பள்ளிவாசல்கள், வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்கள் என அடுத்தடுத்து வரிசையாக நாசமாக்கப்பட்டன. நீர் விநியோக வலையமைப்பு, மின்சார விநியோகக் கட்டமைப்பு, தொலைத்தொடர்பு வசதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என உற்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. மனிதகுல வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை தேவையான அனைத்துமே சின்னா பின்னமாக்கப்பட்டன.

இந்த யுத்தம் மிக சோமான மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தியது. முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடு வாசல்களை காணிகளை இழந்து இடம்பெயர்ந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டனர். 16000த்துக்கும் அதிகமானவர்கள் பட்டினிக் கொடுமைக்கும் வாந்திபேதிக்கும் ஆளாகியுள்ளனர். இந்த வாந்திபேதி இன்னமும் யெமன் முழுவதும் பரவி வருகின்றது. ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவீன மனித குல வரலாற்றில் ஒரு பேரவலமாக இது பதிவாகியுள்ளது. யெமனின் 27 மில்லியன் சனத்தொகையில் 80வீதமான மக்கள் ஏதோ ஒரு வகை நிவாரண உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 14.5 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 7.3 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் வாழுகின்றனர். நாட்டில் உள்ள பல மருத்துவ நிலையங்கள் செயற்படாத நிலையில் காணப்படுகின்றன.

உலகில் மிகமோசமான மனிதாபிமான நெருக்கடி நிலவும் நாடாக யெமன் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாடு முழமையாக நிலைகுலையும் நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.yemen protest

ஏற்கனவே வறுமை மோசமான ஆட்சி என்பனவற்றால் பாதிக்கப்பட்டிருந்த யெமன் சவூதி அரேபியா தலைமையிலான தாக்குதல்கள் காரணமாக மிக மோசமான மனிதப் பேரவலத்துக்கு ஆளாகியுள்ளது. அந்த மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டதே இதற்கு காரணம். யெமன் அரசை எதிர்த்து போராடிய ஹெளத்தி கெரில்லாக்களுக்கு எதிராகக் களமிறங்கிய சவூதி அவர்கள் மீது தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் ஆகாய மற்றும் கடல் மார்க்கமான தடைகளை அமுலுக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த நாட்டுக்கான அத்தியாவசிய இறக்குமதிகள் யாவும் தடைபட்டன. மில்லியன் கணக்கான மக்கள் நிர்க்கதி நிலைக்கு ஆளாக இதுவே பிரதான காரணமாக அமைந்தது.

இந்தத் தாக்குதல்களை வழி நடத்திய சவூதி அரேபியா மீது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள மிகவும் பாரதூரமான விமர்சனம் யெமனில் வாந்திபேதி தீவிரமாகப் பரவ இந்தத் தாக்குதல்களே காரணமாயிற்று என்பதுதான். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். யெமனின் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தின் மீதான தடைகள் அந்த நாட்டின் பிரதான துறைமுகமான ஹொதீதா துறைமுகத்தின் மீதான தடைகள், மற்றும் ஹெளத்தி கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதான தடைகள் என்பன காரணமாக அங்கு மனிதாபிமான நிவாரண உதவிகளை கூட அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை தான் இந்த மோசமான மனிதப் பேரவல நிலை ஏற்பட காரணங்களாக அமைந்துள்ளன. இதனால் இந்தத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திய சவூதி அடீரபியா மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை பாரிய அளவில் இழந்துள்ளது.

சவூதியின் இந்தத் தொடர் விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் பக்கபலமாக உள்ளன. இந்தத் தாக்குதல்களுக்குத் தேவையான புலனாய்வு தகவல்கள் மற்றும் நாசகார ஆயுதங்கள் உற்பட அனைத்து ஆதரவும் இந்த நாடுகளால் வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு முஸ்லிம் நாட்டை நாசப்படுத்த வேண்டும் என்ற இந்த நாடுகளின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலுக்கு இவை மிகவும் இசைவாகவும் உள்ளன. அந்த வகையில் மிகவும் பாரம்பரியம் மிக்க செழுமையான வரலாறைக் கொண்ட யெமன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றது. பஹ்ரேன், குவைத், கத்தார், ஜேர்ர்தான் சூடான் என்பன யெமனை அழிக்கும் சவூதியின் நேசக் கூட்டணியில் உள்ள ஏனைய நாடுகளாகும்.

யெமன் மீதும் அந்த நாட்டு மக்கள் மீதும் இழைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றங்களை உலகம் இன்னும் கண்டு கொள்ளவில்லை. ஏனைய முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் என்பன இழைத்து வரும் யுத்தக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கண்டு கொள்ளாமல் இருக்கப்படுவது போலவே யெமன் மீதான குற்றங்களிலும் சர்வதேச சமூகம்; பராமுகமாக உள்ளது.

அரபுலகப் பிராந்தியத்தில் யெமன் நீண்டகாலமாக ஒரு வறிய நாடாகவே இருந்து வந்துள்ளது. முன்னர் அது அமெரிக்க உதவிகளிலும் அதன் அண்டை நாடுகளின் உதவிகளிலும் தங்கியிருந்தது. மிக மோசமான பணவீக்கத்தையும் வேலையற்றோர் விகிதத்தையும் அது கொண்டிருந்தது. இந்தக் காரணிகள் தான் 2011ம்ஆண்டு அரசுக்கு எதிரான எழுச்சிகளுக்கு வழிவகுத்தன.

ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலேஹின் 33 வருட ஆட்சியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டபோது அந்த நாட்டின் எண்ணெய் வளத்தின் மூலம் ஈட்டப்பட்ட செல்வமும் சேர்த்து காணாமல் போனது. ஊழல் மோசடிகள் மூலம் ஈட்டப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த செல்வத்தின் பெறுமதி கூமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஜனாதிபதி சாலேஹ் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின் ஹெளத்தி கெரில்லாக்களுக்கும் சர்வதேச ஆதரவு பெற்ற யெமன் அரச படைகளுக்கும் இடையில் மோசமான மோதல்கள் மூண்டன. செப்டம்பர் 2014ல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து யெமனின் மிகப் பெரிய நகரமான அடென் நகரை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கினர். இந்த முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், ஹெளத்தி கெரில்லாக்களை விரட்டியடிக்கும் நோக்கில் தான் 2015 மார்ச்சில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல் தொடங்கியது.

சவூதி அரேபியாவின் தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுபவை. அவை வேண்டுமென்றே பொது மக்களை குறிவைப்பதாகவும் உள்ளன. இவை யுத்தக் குற்றங்களாக கருதப்பட வேண்டியவை என்று சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணமயப் படுத்தியுள்ளது.

சவூதி தலைமையிலான படைகள் இங்கு கொத்தணி குண்டுகளைப் பாவித்துள்ளன. சர்வதேச சட்டங்களின் படி தடை செய்யப்பட்டுள்ள பாரிய அழிவை ஏற்படுத்தும் வெடி பொருள்களைக் கொண்ட ஆயுதங்களை பாவித்துள்ளன. கொத்தணி குண்டுகள் ஒரே தடவையில் டசன் கணக்கில் பாவிக்கப்பட்டுள்ளன. இவை சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து கீழே பரவி பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை பரவித் தாக்குவதால் ஆரம்ப நிலையிலேயே பாரிய காயங்களை ஏற்படுத்தக் கூடியவை. அமெரிக்கா, பிரிட்டன், பிறேஸில் போன்ற நாடுகளில் உற்பத்திச் செய்யப்பட்ட நான்கு வௌ;வேறு வகையான கொத்தணி குண்டுகள் பாவிக்க்பபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள் பரவலாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மனிதக் குடியிருப்புக்கள் மீதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எண்ணற்ற பொதுமக்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். இவை யுத்தங்கள் தொடர்பான சர்வதேச சட்டங்கள் மற்றும் நியதிகள் அனைத்தையும் மீறும் வகையில் அமைந்துள்ளன என்றும் மன்னிப்புச் சபை தெரிவித்தள்ளது.

யெமனில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு சட்ட விரோதமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் வந்து குவியும் ஆயதங்கள் அப்பாவி பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதற்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்காவும் பிரட்டனும் தனது பொருளாதார நலனுக்காக மேற்கொண்டு வரும் இந்த செயற்பாட்டை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

யெமனில் பல்வேறு தரப்பினரதும் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சர்வதேச சட்டங்கள் கண்டபடி மீற்ப்படுவதால் அவை அப்பாவி பொதுமக்கள் வாழ்வில் பாரிய அளவில் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதலில் பயன்படுத்துவதற்காக பல நாடுகள் சவூதி அரேபியாவுக்கும் அதன் நேச அணி நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதோடு ஆயுதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் ஹெளத்தி கெரில்லாக்களுக்கும் ஏனைய போராட்ட குழுக்களுக்கும் கூட ஆயுதங்கள் தாராளமாகக் கிடைத்து வருகின்றன.

2015 முதல் 2016 வரையான காலப்பகுதியில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, துருக்கி ஆகிய நாடுகள் சவூதி அரேபியாவுக்கு 5.9 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைப் பரிமாறியுள்ளன. ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், குண்டுகள், ரொக்கெட்டுக்கள் என பல ஆயுதங்கள் இவற்றில் அடங்கும்.

மனிதத் துயரங்களை குறைப்பதற்கான சர்வதேச உடன்பாடுகள் பலவற்றில் ஏற்கனவே ஒப்பமிட்டுள்ள நாடுகள் தான் இவ்வாறு ஆயுதங்களையும் பரிமாறிக் கொள்கின்றன. ஆயுதப் பரிமாற்றங்கள் மக்களுக்கு அதி உயர் ஆபத்தை விளைவிப்பவை என்பதை அறிந்திருந்தும் கூட சர்வதேச சட்டங்களை ஒட்டு மொத்தமாக மீறுகின்ற வகையில் இந்த நடவடிக்கைகளில் மேற்படி நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கற்ற மற்றும் துஷ்பிரயோகப் பின்னணியில் உண்மை, பொறுப்புக் கூறல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் என்பன நிலை    நிறுத்தப்பட வேண்டிய அவசரத் தேவை அங்கு ஏற்பட்டுள்ளது. சவூதி மற்றும் யெமன் ஆகிய தரப்புக்களின் விசாரணைகள் எதுவும் இடம்பெற்றிராத நிலையில் உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ஐக்கிய நாடுகள் தலைமையிலான சர்வதேச விசாரணைகள் இடம் பெறுவதே உண்மைகளை வெளிக் கொண்டு வர ஒரே வழி என சர்வதேச மன்னிப்புச் சபை யோசனை தெரிவித்துள்ளது. குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்தவும் தண்டனை வழங்கவும் இது ஒன்றே சிறந்த வழியாகும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவும் இதுவொன்றே சரியான வழி என்பதே சர்வதேச மன்னிப்புச் சபையின் நிலைப்பாடாகும்.

yemen 43யெமன் மீது குற்றம் புரிந்த வெற்கம் கெட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து சவூதி அரேபியா நீக்கப்பட்டுள்ளது. அது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஐ.நா முன்னாள் செயலாளர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து தனது பெயரை நீக்கிக் கொண்டது. முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதை அறிவித்ததும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஐக்கிய நாடுகள் நிவாரணத் திட்டங்களுக்கு தான் வழங்கும் நிதியை நிறுத்திக் கொள்ளப் போவதாக சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையை எச்சரித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

“எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இன்றி அரசியல் காரணங்களுக்காக மட்டும் அவ்வாறு ஒரு நாட்டை ஏற்கனவே இடப்பட்டிருந்த பட்டியலில் இருந்து நீக்கினால் ஒரு சில நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் நடவடிக்கைகளுக்கு உற்படுகின்ற நாடுகளாக இருக்கும் என்ற ஒரு தவறான தகவல் உலக அரங்கிற்கு வழங்கப்படுகின்றது” என்று மன்னிப்புச் சபை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயத்தில் இந்த ஆண்டுக்கான அறிக்கை எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மீண்டும் சவூதி அரேபியாவையும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் இந்த வெற்கம் கெட்ட நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா சிறுவர் பாதுகாப்பு அமைப்பு தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. யெமனில் இந்த இரண்டு நாடுகளும் இழைத்துள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றங்களுக்காக அவை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” கடந்த வாரம் இது தொடர்பான ஒரு மகஜரை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்தோம். ஆதில் 37000 கையொப்பங்கள் இடப்பட்டுள்ளன. அவர் இந்த விடயத்தில் உறுதியானதோர் முடிவுக்கு வரவேண்டும். சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதை அவர் உறுதி செய்ய வேண்டும. பான் கீ மூன் கடந்த ஆண்டு செய்யத் தவறியதை தற்போதைய செயலாளர் நாயகம் செய்ய வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபையின் உயர் அதிகாரி கேய் வலியுறுத்தியுள்ளார்.

தமது அண்டை நாடான யெமன் என்ற முஸ்லிம் நாட்டின் மீது தம்மை முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளும் முஹம்மத் பின் சல்மான் மற்றும் முஹம்மத் பின் செயித் ஆகியோர் எப்படி இவ்வளவு மோசமான யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல் குற்றங்களையும் புரிய முடியும்? அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உற்பட ஐரோப்பிய யுத்த வெறியர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களால் தங்களது உடன் பிறவா சகோதரர்களை இவர்கள் கொன்று குவித்துள்ளனர். பல தசாப்தங்களுக்கு முன் கல்வி அறிவும் செல்வமும் இன்றி வறுமையில் வாடிய இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்ட பெரும் கொடையான எண்ணெய் வளத்தை பாவித்து அப்பாவி பொது மக்களை இவர்கள் கொன்று குவித்துள்ளனர். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் அவர்களின் ஏனைய ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் ரஷ்ய கூட்டாளிகளும் இணைந்து தொடுத்துள்ள சிலுவைப் போரில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இணைந்துள்ளன என்பதையே இது தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

சவூதியையும் அரபு இராச்சியத்தையும் கண்டிக்கும் முஸ்லிம் குரல்கள் எங்கே? ஊலகம் முழுவதும் வாழும் 1.7பில்லியன் முஸ்லிம்களினதும் வெற்கக் கேடான நிலை இதுதான்.