syrian refugees 1முக்கால்வாசிப் பேர் முஸ்லிம் அகதிகள்

அகதிகள் பிரச்சினை இன்று உலகளாவிய பிரச்சினை. உலகளவில் அறுபது மில்லியன் பேர் இன்று அகதிகளாக இருக்கிறார்கள். அகதி முகாம்களில் கடும் கஷ்டங்களையும், வறுமையையும் சந்தித்து இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் முக்கால் வாசிப் பேர் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்பது கசப்பான உண்மை. இஸ்ரேலிய அனுசரணையுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அரபு சர்வதிகாரிகள் மூலம்   மேற்கொள்ளப்படுகின்ற யுத்த முன்னெடுப்புக்களே இவர்களை இந்தக் கதிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை, அகதிகள் பிரச்சினை என்பது மத்திய கிழக்கில் கேள்விப்படாத பிரச்சினை. உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழ் அப்போது அமைதியாக அவர்கள் வாழ்க்கை கழிந்தது. கூட்டுப் படுகொலைகள், பலவந்த வெளியேற்றம், (இடம் பெயர்வு காரணமாக) குடும்பங்கள் பிரிந்து வாழ்தல் என்பன முஸ்லிம் உலகில் கேள்விப்படாத விஷயங்கள்.   

இரண்டாம் உலகப் போருடன், பலஸ்தீன் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் வந்ததில் இருந்து, அகதிகள் பிரச்சினை மத்திய கிழக்கில் ஆரம்பித்தது. யூத தேசத்தை நிறுவுவதற்கும்  பலஸ்தீன நிலங்களை சுவீகரிப்பதற்கும் பலஸ்தீனியர்களைப் படுகொலை செய்கின்ற நிகழ்ச்சி நிரலுடன் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புக்களுக்குப் பிரிட்டன் உதவி புரிந்து வந்தது.

ஸியோனிஸ்டுகள் தமது கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டு ஒன்றன் பின் ஒன்றாக படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட, பலஸ்தீனியர்கள் பாதுகாப்புத் தேடி தம் வீடுகளையும், இடங்களையும் விட்டு வெளியேறத் துவங்கினர். 1948 இல் யூத தேசம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்பட்ட போது, இந்த அக்கிரமங்கள் உச்ச நிலையை அடைந்து, பலஸ்தீன் அகதிகள் பிரச்சினையின் முதலாவது அலை ஆரம்பித்தது. தம் உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு, அயல் நாடுகளான ஜோர்தான், லெபனான், சிரியா மற்றும் எகிப்து ஆகிய அயல் நாடுகளில் அகதிகளாக அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.

தமது பூர்வீகத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டவர்கள் என்ற வகையில், இன்று வரை அவர்கள் அகதி முகாம்களில் துன்பங்களை சந்தித்துக் கொண்டு, காலம் தள்ளி வருகிறார்கள்.refugee2

1967 அரபுஇஸ்ரேல் யுத்தத்தைத் தொடர்ந்து, பலஸ்தீனின் இரண்டாவது அகதிகள் அலை ஆரம்பிக்கிறது. பலஸ்தீன் அகதிகள் இவ்விதம் துன்பங்களை சந்தித்து வந்த போது, மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் என்றெல்லாம் உரத்த குரலில் பேசுபவர்கள், தம் கண்களை மூடி, காதுகளைப் பொத்திக் கொண்டு, அமைதி காத்தார்கள்.

இரண்டாம் உலகப் போரிற்குப் பிற்பட்ட காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற சக்திகள் மூலம் நடாத்தப்பட்ட யுத்தங்கள் மூலம், மில்லியன் கணக்கான பலஸ்தீன், ஆப்கான், பொஸ்னிய, செச்னிய, ஈராக்கிய, லிபிய, மற்றும் பிற முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அகதிகளானார்கள்.

இவற்றுள் ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகள் உயர்ந்த அபிவிருத்தி நிலையைக் கொண்டிருந்தவை. நவீன வாழ்க்கை வசதிகளுடன் உயர்ந்த வாழ்க்கை தரத்தை இங்குள்ள மக்கள் அனுபவித்து வந்தனர்.

யுத்த வெறி பிடித்தவர்கள் அதி நவீன, அழிவுகரமான கருவிகளை இந்நாடுகளில் பயன்படுத்தினர். அவை இந்நாடுகளின் அடிக்கட்டுமானங்களை அடித்துத் தரை மட்டமாக்கின. நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை இந்த யுத்தங்களில் கொல்லப்பட்டுள்ளனர். அடிக்கட்டுமானங்கள் அழிக்கப்பட்டு, தம் தேசம் கொலைக்களமாக மாற்றப்பட்ட பிறகு, தமது குடும்பங்களை அழைத்துக் கொண்டு, வெறுங்கையுடன் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு, எங்கு போய்ச் சேர்வது என்ற இலக்கில்லாமல், எங்கு இலகுவில் போய் சேர முடியுமோ அங்கு போய் சேர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

சிலர் தம் அயல்நாடுகளை சென்றடைந்தார்கள். உதாரணமாக, ஆப்கான் அகதிகள் பாகிஸ்தானையும், சில போது ஈரானையும் சென்றடைந்தார்கள். ஈராக்கியர்கள் சிரியாவையும், சிரியர்கள் தமக்குப் பிரச்சினை வந்த போது துருக்கியையும் சென்றடைந்தார்கள்.

refugee3அரபுமுஸ்லிம் அகதிகளில் அதிகமானவர்கள் அரபுவளைகுடா நாடுகளை நோக்கிச் செல்ல முற்படவில்லை. தமக்கு எந்த மாதிரியான வரபேற்பு அந்நாடுகளில் காத்திருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும். தமக்கெதிரான கொலைவெறியை கட்டவிழ்த்து விட்டவர்கள் என்ற நிலையிலும், ஐரோப்பாவை நோக்கித்தான் இவ்வகதிகள் படையெடுத்தார்கள்.

ஐரோப்பாவிலும், மற்றைய இடங்களிலும் இவர்கள் எண்ணிலடங்காத துன்பங்களை எதிர்கொண்டார்கள். செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டுமே, அதிக பட்சமாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அகதிகள் வாழ்கிறார்கள்.

மற்றைய அரபு நாடுகளின் மன்னர்களைப் பொறுத்த வரை, அகதிகள் விடயத்தில்  அவர்களின் இதயங்கள் ஈரலிப்பற்றிருக்கின்றன. சிரிய மனிதாபிமான நெருக்கடி விடயத்தில், இந்நாடுகளின் கையாலாகாத் தனத்தை வெட்கக் கேடானது என மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் நாடிம் ஹோரி குறிப்பிட்டிருந்தார்.

அகதிகளுக்கு உதவுவதற்குப் பதிலாக, தம் அமெரிக்க எஜமானர்களின் திட்டங்களை அரபுலகில் நிலைநிறுத்துவதற்கு சோரம் போகின்றவர்களாகவே அரபுலக மன்னர்கள் இருக்கின்றார்கள். சிரியாவையும், யெமனையும் கொலைக் களமாக்குவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். யெமன் மீது வளைகுடா நாடுகள் மேற்கொண்டு வரும் இராணுவ முன்னெடுப்பில், இது வரை 14000 அப்பாவிப் யெமனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகள் இன்னும் நிறைவடைந்து விடவில்லை.

இதே நேரம், ஆயிரக் கணக்கான லிபிய மற்றும் சிரிய மக்கள் ஐரோப்பாவை நோக்கி அகதிகளாகப் படையெடுத்தனர். பாதுகாப்பற்ற, கூடுதல் சுமையுடன் செல்கின்ற அபாயகமான படகுகள் மூலம் மத்திய தரைக் கடலைக் கடக்க இவர்கள் முற்பட்டனர். இப்படகுகள் கவிழ்ந்ததில் பலர் மாண்டனர். கடலைக் கடக்கும் அளவுக்கு அதிஷ்டம் பெற்றிருந்தவர்கள் குளிர், உணவுப் பற்றாக் குறை போன்ற பிரச்சினைகளை மட்டுமன்றி, தொடர்ச்சியான துன்புறுத்தல்களையும், தலைகுணிவையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஜூலியா . செய்மர் என்பவரின் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

தேவாலயத் தலைவர்கள் தருகின்ற தகவல்களின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் அகதிகள் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்”. ஒஸ்ரியா, ஜேர்மன், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, ஆப்கான், ஈரான், ஈராக், எரிற்றியா, பங்களாதேஷ் போன்ற இடங்களிலும் இந்நிலை இருப்பதாக சொல்லப்படுகின்றது.

ஆனால், இந்த வீதம் புறக்கணிக்கத்தக்களவு மிகச் சிறியது என்றே சொல்லலாம். இவ்விதம் மதமாறுவோர் சொல்லும் காரணம் மிக எளிமையானது. நம்பகமான போதிய தகவல்கள் இது விடயத்தில் இல்லா விட்டாலும், இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தம் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே மதம் மாறுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்

refugee4

தம் சொந்த நட்டுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பதற்காகவே தான் மதம் மாறியதாக வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார் ஆப்கான் அகதியொருவர். இவ்விதம் தான் திருப்பி அனுப்படும் பட்சத்தில் தன் உயிருக்கு பல்வேறு அபாயங்கள் இருக்கிறன என்கிறார் இவர்.         

யூ.என்.எச்.சீ.ஆர் அமைப்பின் 2016 ஜூன் அறிக்கையின் படி. யுத்தம் மற்றும் சித்திரவதைகள் என்பனவே அதிகமானவர்கள் தம் நாடுகளில் இருந்து வெளியேறுவதற்குக் காரணமாக உள்ளது. விரிவான இந்த ஆய்வின் படி, 2015 கடைசியில் உலக சனத்தொகையில், 65.3 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தவர்களாக இருந்தனர். இதற்கு 12 மாதங்களுக்கு முன்பு இத்தொகை 59.5 மில்லியன்கள். இந்த .நா நிறுவனம் உருவாக்கப்பட்டதில் இருந்து, உலக அகதிகள் தொகை அறுபது மில்லியனைத் தாண்டியது இதுதான் முதல் தடவை.

.நா. அகதிகளுக்கான அமைப்பின் உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டே இப்படிச் சொல்கிறார்:

‘’கடலில் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகளவு எண்ணிக்கையான அகதிகளும், இடம்பெயர்வாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் (இடம்பெயர்ந்து செல்கின்ற  வழியில் ஏற்படும் பல்வேறு அபாயங்களால்) மரணமடைகிறார்கள். தரையில், போர்ப் பிரதேசத்தில் இருந்து, தப்பிச் செல்லும் அகதிகள் மூடப்பட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். எல்லைகளை மூடுவது பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல….” .

குண்டு வீச்சும், அழிவுகளும், கொலைகளும் இன்றும் முடிவின்றித் தொடர்கின்றன. தம் நாட்டின் தலைவர்களே யுத்த வெறி கொண்ட சர்வதேச சக்திகளுடன் கைகோர்த்துள்ள நிலையில், இறைவனைத் தவிர, வேறு முறையிடுவதற்கு வேறு ஆளில்லாத நிலையில் தவிக்கிறார்கள் இந்த அகதிகள்.