saudi armsபழங்குடி ஆட்சியாளர்களின் ஒழுக்கவியல் வங்குரோத்து நிலையை புலப்படுத்துகின்றது

லத்தீப் பாரூக்

சவூதி அரேபியாவின் முடிக்குரிய வாரிசாக அண்மையில் அறிவிக்கப்பட்ட இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பெண்கள் அரைகுறை பிகினி ஆடைகளுடன் சூரியக் குளியல் எடுக்க வழிவகுக்கும் வகையில் ஆடம்பர ஹோட்டல் தொகுதி ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளார். கோடிக்கணக்கான டொலர் செலவில் இந்தத் திட்டம் அறிமுகமாகவுள்ளது. செங்கடலை அண்டிய 125 மைல் கரையோர பரப்பில் அமையவுள்ள இந்த ஹோட்டல் இதுவரை யாரும் கைவைக்காத இயற்கை கடல்வளம் மிக்க தீவுப் பகுதியாகும்.

இஸ்லாத்தின் பிறப்பிடமான சவூதி அரேபியாவில், இஸ்லாமிய வரலாற்றோடு நேரடி தொடர்புள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்கள் அமைந்துள்ள ஒரு மகத்தான பூமியில் இத்தகைய அனாச்சாரம் மிக்க ஒரு திட்டம் அமுலுக்கு வரவுள்ளமை நம்பவே முடியாத ஒன்றாக உள்ளது. இஸ்லாத்தின் தூதை ஏனைய மக்கள் மத்தியில் பரப்புவதற்கான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கும் ஒரு ஆட்சியாளர்களிடம் இருந்து புண்ணிய பூமியில் இப்படி ஒரு திட்டமா என உலக முஸ்லிம்களை இது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக அளவில் தரம் குறைந்து போயுள்ள நாகரிகத்தின் அடையாளச் சின்னமான பெண்களை பிகினி ஆடையுடன் வலம் வர அனுமதிக்கும் இந்த நிலை சவூதி அரேபியாவிலும் கரையோர ஹோட்டல் திட்டம் என்ற பெயரில் அமுலுக்கு வருவது உண்மையிலேயே நம்ப முடியாத ஒரு விடயம் தான். கொடுங்கோல் ஆட்சிகளின் கீழ் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கிலும் அதன் அயல் நாடுகளில் இருந்தும் இந்தத் திட்டத்துக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் என்னுடைய எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

முதலில் இந்த அறிவிப்பு வெளியானதும் இதுவும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான வழமையான ஒரு தீய செயலாக இருக்கும் என்றே எண்ணினேன். ஆனால் சர்வதேச செய்தி நிறுவனங்கள் பல அடுத்தடுத்து இந்த திட்டம் தொடர்பான தகவல்களை விரிவாக வழங்கத் தொடங்கியதும் சற்று அசந்து போய் விட்டேன்.

இந்தத் தகவல்களின் படி நாட்டின் பொது முதலீட்டு நிதியத்தில் இருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்த நிதியத்தின் தலைவராக இருப்பவர் இளவரசர் முஹம்மத் பின் சல்மான். 2019ல் இதற்கான நிர்மாணப் பணிகள் தொடங்கவுள்ளன. 2022ல் இந்தத் திட்டத்தின் முதலாவது கட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளது. வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பலர் விஸா எதுவும் இன்றி இந்த உல்லாச புறிக்கு நேரடியாகவே சென்று இறங்கலாம்.

இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பாக இங்கு ஆண்களும் பெண்களும் அரைகுறை ஆடைகளுடன் அந்நியோன்யமாக திரியலாம் என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது.

தலையை சீவும் கூட்டம் என மேற்குலக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் சவூதி அரேபியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பிரமாணம் செய்து கொண்டுள்ள எதிரிகளாகத் திகழும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மகிழ்வூட்டும் விடயத்தில் பித்துப்பிடித்துள்ள ஒரு கூட்டமாகவே காணப்படுகின்றனர். தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தங்களது நாட்டில் கொள்ளையிட்டு அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான பில்லியன் டொலர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு நோக்கங்கள் எதுவும் இந்த ஆட்சியாளர்களுக்கு கிடையாது.

எவ்வாறேனும் இந்த மடத்தனமான திட்டம் மண்ணை கவ்வும் அது வெற்றி அளிக்கப் போவதில்லை என்பதே பலரதும் கருத்தாகும். சவூதி அரேபியாவுக்கு இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுவது பிகினி சுற்றுலா அல்ல. சமய சார்பு சுற்றுலா. இது முழுக்க முழுக்க இஸ்லாமிய வரலாற்றோடும் பாரம்பரியத்தோடும் தொடர்புடைய ஒரு பூமியாகும். ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா திட்டத்தின் மூலம் இது உலகின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட வேண்டும். அதன் மூலம் முழு உலகிலும் வாழும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய வரலாறு தொடர்பான அறிவு ஊட்டப்படுவதோடு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும்.

மறுபுறத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சவூதி ஆட்சியாளர்களின் போக்கை அவதானிக்கின்ற போது அவர்களின் தற்போதைய நாசகாரத் திட்டம் அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்காத ஒரு விடயமும் அல்ல.

சவூதி அரேபியாவின் இன்றைய ஆட்சி முறை ஆளும் குடும்பத்துக்கான விஷேட சிறப்புரிமைகள், அதிகாரங்கள், ஒட்டு மொத்த நாடும் தமக்கே சொந்தம் என்ற மனோபாவம், மக்களை அடக்கி ஒடுக்கும் போக்கு என்பன முற்று முழுக்க இஸ்லாத்துக்கு விரோதமானதோர் நிலைப்பாடாகும். சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தக் கொடுமைகள் மற்றும் அட்டூழியங்களில் இருந்து மனித குலத்தை விடுவித்த ஒரு மார்க்கம் தான் இஸ்லாமாகும்.

இந்த அடிப்படையில் பல்வேறு சுதந்திரமான ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ள தகவல்களின் படி இந்த சவூதி அரேபிய ஆளும் குடும்பமானது மதீனாவில் இருந்த யூத வழித்தோன்றலில் வந்த ஒரு குடும்பத்தின் பரம்பரையாகும். இந்த குடும்பத்தின் மூதாதையர்கள் தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதை மக்கள் மத்தியில் பரப்பிய போது அவர்களுக்கு சொல்லொணா துன்பங்களை விளைவித்தவர்கள் ஆவர்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் துருக்கிய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பல நாடுகளாகவும் குட்டி ராஜ்ஜியங்களாகவும் கூறு போட்டு அவற்றில் தமது கைக்கூலிகளை ஆட்சியில் அமர்த்தின. அந்த வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் அவர்களின் சியோனிஸ பங்காளிகளாலும் மிகக் கவனமாகத் தெரிவு செய்யப்பட்டு புனித பூமிகள் அமைந்துள்ள இடத்தில் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் தான் இப்னு சவூத் குடும்பத்தவர்கள்.

இந்தக் குடும்பத்துக்கு பிரிட்டிஷ் மற்றும் யூத சக்திகளால் பெரும் தொகை பணம் இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டதோடு பெருந்தொகை ஆயுதங்களும் வழங்கப்பட்டன. இங்கு எண்ணெய் வளம் மேலோங்கியதை அடுத்து சவூதி அரேபியா இயல்பாகவே அமெரிக்காவின் ஒரு செய்மதி நாடாக மாறியது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு யூத சக்திகள் தான் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து வருகின்றன.

தற்போது சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஏமாற்றி தம்மை ஆட்சியில் அமர்த்திய எஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதோடு அவர்களுக்கான கடப்பாடுகளையும் ஈடேற்றி வருகின்றது. அத்தோடு தமது சொத்து சுகங்களையும் செல்வத்தையும் பேணிக் கொள்வதற்காகவும் ஆட்சியை தக்க வைத்தக் கொள்வதற்காகவும் மேலைத்தேச கிறிஸ்தவ சக்திகளுடனும் சீரானதோர் உறவை பேணி வருகின்றனர்.

இந்த நிலையில் தமக்கு ஆதரவான எந்தவொரு சக்தியையும் பகைத்துக் கொள்வது என்பதோ அல்லது அவர்களின் உள்ளங்களை நோகச் செய்வதோ சவூதி அரேபியாவால் முடியாத ஓர் காரியம். குறிப்பாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கும் ஆபத்தையும் அழிவையும் கொண்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில்; அமெரிக்காவின் நடவடிக்கைகளின் நடுவே இந்த சக்திகளைப் பகைத்துக் கொள்வது என்பது சவூதி அரேபியாவால் ஈடுகொடுக்க முடியாத ஒன்றாகும்.

1989ல் சோவியத் யூனியன் சரிவடைந்ததை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ரஷ்யா என்பன இணைந்து வெட்கக் கேடான அரபு நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்களுடன் கூட்டணி அமைத்து முஸ்லிம் நாடுகளை அழித்து முஸ்லிம்களை கொன்று குவிக்கத் தொடங்கின. பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், செச்னியா, சோமாலியா, குவைத், ஈராக், லிபியா, சிரியா என கட்டுக்கடங்காமல் செல்கின்றது. முஸ்லிம் நாடுகள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து சவக்காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அவற்றின் செழிப்பான உட்;கட்டமைப்புக்கள் சிதைக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள் தமது சொந்த பூமிகளில் இருந்து திக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கா தலைமையிலான யுத்த வெறியர்களுடன் சவூதி அரேபியா கைகோர்த்துள்ளது. இந்த யுத்தங்களில் பெரும்பாலானவை இஸ்ரேல் இந்தப் பிராந்தியத்தில் அகலக் கால் பதிக்கவே வழியமைத்துள்ளன.

இவற்றின் நடுவே தான் யெமன் மீது சவூதி அரேபியா தலைமையில் வேண்டத்தகாத தாக்குதல் ஒன்று தொடுக்கப்பட்டது. இதில் ஆண் பெண் சிறுவர்கள் என வயது பால் மற்றும் வயது பேதமின்றி 18 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க நிகழ்ச்சி நிரலை அமுல் செய்யும் சவூதி ஆட்சியாளர்கள் அல்ஜீரியா, எகிப்து ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் அவர்களுக்கு வேண்டப்படாத ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கு பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டுள்ளது. காஸாவில் கூட எண்ணாயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்களைக் கொன்று குவித்து அந்தப் பிரதேசத்தையே பலிபீடமாக மாற்றியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் இஸ்ரேலும் சவூதியும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. ஜோர்தான் சிரியா, லிபியா, லெபனான், எகிப்தின் ஒரு பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய அகண்ட இஸ்ரேலிய ராஜ்ஜியத்தை உருவாக்கவே மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட யுத்தங்கள் வழிவகுத்துள்ளன. சவூதி அரேபியாவின் பங்களிப்புடன் தான் இது சாத்தியமாகியுள்ளது.

இவ்வாறு வெட்கக் கேடான விதத்தில் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய நிலை சவூதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் உச்ச கட்டமாகத்தான் அண்மையில் தனது நாட்டுக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சவூதி மன்னர் தனது நாட்டின் அதி உச்ச விருதை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்த அசிங்கத்துக்கு மேலும் மெருகூட்டும் வகையில் டொனால்ட் டிரம்ப்புடனான றியாத் உச்சிமாநாடு ‘ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு உச்சி மாநாடு’ என சவூதியின் கூலிப்படை முல்லாக்கள் வர்ணித்துள்ளனர். தங்களது பதவிகளை தக்கவைப்பதற்காக தமது ஆன்;மாக்களையே விற்கத் தயாராக இருக்கும் சவூதி ஆளும் வர்க்கத்தின் வெட்கக் கேடான நிலையைத் தான் இது சுட்டிக்காட்டுகின்றது. இத்தகைய முல்லாக்கள் சவூதி அரேபியாவில் மட்டும் தான் இருக்கின்றார்கள் என்று நாம் எண்ணி விடக் கூடாது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. சவூதி தாளத்துக்கு ஏற்ப நடனமாடி இஸ்லாத்தை விலை பேசும் முல்லாக்கள் இங்கும் நிறைய பேர் உள்ளனர்.

இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிகவும் கேவலமானதோர் விடயம் இதுவாகும். இதே ஆட்சியாளர்தான் மக்காவிலும் மதீனாவிலும் அமைந்துள்ள புனிதப் பள்ளிவாசல்களின் காவலராகவும் தன்னை பிரகடனம் செய்துள்ளார். முஸ்லிம்களை இந்தளவு கேவலத்துக்கும் அவமானத்தக்கும் ஆளாக்கிய ஒருவர் எப்படி தம்மை புனித பள்ளிவாசல்களின் காவலராகப் பிரகடனம் செய்யலாம் என்பதே நடுநிலை முஸ்லிம்கள் எழுப்பியுள்ள கேள்வியாகும். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக துரத்தி துரத்தி கொல்லப்படுவதுதான் இன்றைய உலகின் யதார்த்த நிலையாகும்.

முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எந்த விதமான கவலையும் அற்றவர்கள் தான் சவூதி ஆட்சியாளர்கள். தமது பணத்தைக் கொண்டு எந்தவொரு ஆட்சியாளரையும் வளைத்துப் போட்டு புனிதப் பள்ளிவாசல்களின் பிடியை தமது இரும்புக் கரங்களுக்குள் அடக்கி வைக்கும் வல்லமை அவர்களுக்கு இப்போது உண்டு. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் அவர்கள் இதைச் செய்கின்றனர்.

இஸ்லாமிய சட்டம் என்று சொல்லப்படுகின்ற சவூதி சட்டத்தின் கீழ் பெண்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. இது வரலாற்றின் மத்திய கால பழங்குடி சட்டம். இதற்கு இஸ்லாத்தோடு எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் அடிமைத்தனத்தில் இருந்து பெண்களை விடுவித்து அவர்களுக்கு அடிப்படை சுதந்திரங்களையும் உரிமைகளையும் வழங்கிய ஒரு சமயம். சுமார் ஏழு அல்லது எட்டு தசாப்தங்களுக்கு முன் மேலைத்தேச பெண்களால் நினைத்துக் கூடப் பாhக்க முடியாத ஒரு விடயமாக இது இருந்தது.

துரதிஷ்டவசமாக யூத ஆதரவு மற்றும் முஸ்லிம் விரோத மேலைத்தேச ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான சவூதியின் காட்டுமிராண்டித் தனத்தை இஸ்லாமியச் சட்டங்களாகப் பிரகடனம் செய்து வருகின்றன. இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அவை இவ்வாறு செயற்படுகின்றன. இதற்கு ஈடாக சவூதி ஆட்சியாளர்களும் தமது பாணி இஸ்லாமான வஹ்ஹாபிஸத்தை உலகில் பிரசாரம் செய்து வருகின்றனர். இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் தங்கியிருக்கும் சவூதியின் நிலை அதன் சொந்த இருப்புக்காகவே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல. அந்த வகையில் அமெரிக்க இஸ்ரேல் தாளத்துக்கு ஏற்ப ஆடும் சவூதி ஆட்சியாளர்களின் முடிவான பெண்களை அரைகுறை ஆடையுடன் அலைய விடும் நிலை ஒன்றும் எதிர்ப்பார்க்காத விடயமும் அல்ல. முரண்பாடான நிலைமைகள் இதை விட இன்னும் உள்ளன. இவர்களுக்கான கூலியும் தண்டனையும் என்ன என்பதை எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே அறிவான். (முற்றும்)