Trump Israeltமத்திய கிழக்கில் அமெரிக்க யுத்தங்கள் ஏற்படுத்திய சீர்கேடுகள் மேலும் வலுவடையும்

- லத்தீப் பாரூக்

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது டெல்அவிவ் நகரில் இருக்கும் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

அமெரிக்காவுக்குள் இஸ்ரேலுக்கு இருக்கின்ற செல்வாக்கின் நடுவே இது ஒன்றும் ஆச்சரியமான விடயமோ அல்லது எதிர்ப்பார்க்கப்படாத விடயமோ அல்ல. அமெரிக்க ஜனாதிபதிகளை உருவாக்குவதும் இல்லாமல் ஆக்குவதும் இந்த யூத சக்திகள் தான். அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் வர வேண்டுமானால் அவர் செய்ய வேண்டிய முதலாவது கடமை தனது ஆன்மாவையும் மனிதாபிமானத்தையும் அவர் யூத சக்திகளிடம் அடகு வைக்க வேண்டும். தனது தன்மானத்தை இந்த யூத செல்வாக்குள்ள கூட்டாண்மை நிறுவனங்களிடம் பணயம் வைத்தால் தான் ஒருவர் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பது பற்றி கனவு கூட காணலாம். இது தான் யதார்த்தம். இவ்வாறு எல்லாவற்றையும் இழந்த பிறகு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அதற்கான நாற்காலியில் அமர்ந்த பின் இஸ்ரேலின் வடிவமைப்புக்கள் எவ்வளவு தீமை மிக்கதாக இருப்பினும் சரி அவற்றை அப்படியே அமுல் செய்ய வேண்டும். இது தான் அவரின் பிரதான பணி.

கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க ஜனாதிபதிகளால் இது நிரூபிக்கப்பட்டு வந்துள்ள ஒரு விடயம். பராக் ஒபாமா உட்பட எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. முஸ்லிம் உலகத்தின் மீதான இஸ்ரேலின் அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை மிக நேர்த்தியாக நெறிப்படுத்தி அமுல் செய்த வெட்கக் கேடான, இஸ்ரேலுக்கு மிகவும் சார்பாகச் செயற்பட்ட ஒரு ஜனாதிபதியாகவே அவரது பதவிக் காலம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

தற்போது இஸ்ரேலை மிக கடுமையாக ஆதரிக்கும் ஒரு நபரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். இவர் ஒபாமாவை விட இஸ்ரேலுக்கு மிகவும் நெருக்கமானவர். இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தனது கருத்துக்களில் மிகவும் வெளிப்படையானவர்.free palestine

தனது முஸ்லிம் விரோத அதேநேரம் இஸ்ரேல் ஆதரவு கொள்கைகளை அமுல் செய்வதன் ஒரு அங்கமாகத் தான் டிரம்ப் தனது தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெரூஸலம் நகருக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். உலகம் முழுவுதும் உள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களின் சமய உணர்வுகளைப் பற்றி அவருக்கு துளி கூட கவலையோ அக்கறையோ கிடையாது. யூத சக்திகளை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே இலக்கு. முஸ்லிம் உலகுக்கு எதிராக அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கின்றேன் என்ற போர்வையில் தான் அவர் இதனை செய்ய முனைகின்றார்.

இதற்கு எதிராக முஸ்லிம்களிடம் இருந்து சில அறிக்கைகள் வெளிவரும். இன்னும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும். இதைத் தவிர பெரிதாக எதுவும் நடக்காது என்பது டிரம்ப்புக்கு நன்றாகத் தெரியும். முஸ்லிம் நாடுகள் குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகள் அமெரிக்க பிடியில் சிக்குண்டுள்ள ஊழல் பேர்வழிகளின் ஆட்சியின் கீழ் இருக்கின்ற வரை இதுதான் நிலைமை. இவர்கள் தங்களது ஊழலும் அநியாயமும் மிக்க ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக அமெரிக்க பிடியில் சிக்குண்டுள்ள வரைக்கும்; முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநிறுத்தவோ அல்லது கௌரவத்தை நிலை நாட்டவோ எதுவுமே செய்ய மாட்டார்கள். இந்த வெட்கம் கெட்ட அரபு சர்வாதிகார ஆட்சியாளர்கள் தமது சொந்த நாடுகளில் கொள்ளையடித்த கோடிக்கணக்கான டொலர்களை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தான் பதுக்கி வைத்துள்ளார்கள் என்பது டிரம்ப் அறியாத ஒன்றல்ல. எனவே ஜெரூஸலத்தைக் காப்பாற்ற இந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள் என்பதும் டிரம்புக்கு நன்றாகவே தெரிந்த விடயமாகும்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா என்பனவற்றின் ஒத்துழைப்போடு இஸ்ரேலின் ஆதரவுடன் தான் இந்த சர்வாதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளாhகள். எனவே தங்களது மேலைத்தேச யூத – கிறிஸ்தவ எஜமானர்களுக்குத் தான் இவர்கள் கீழ் படிவு மிக்கவர்களாக இருப்பார்கள்.

உண்மையில் 1947ல் ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீனம் சட்டவிரோதமாகப் பிரிக்கப்பட்ட போது மேற்கு ஜெரூஸலம் இஸ்ரேலுக்கு வழங்கப்படவில்லை. இந்தப் பிரிவினைதான் தீய விளைவுகளை ஏற்படுத்திய இஸ்ரேல் என்ற சட்விரோத தீய சக்தி உருவாகக் காரணமாக இருந்தது. அன்று முதல் தான் மத்திய கிழக்கும் கொலைக் களமாக மாற்றப்பட்டுள்ளது. மேற்கு ஜெரூஸலத்தை இஸ்ரேல் மேற்குறிப்பிட்ட நாடுகளின் ஆதரவோடும் ஆசீhவாதத்தோடும்; வன்முறைகளைப் பயன்படுத்தியே அபகரித்துக் கொண்டது. அதன் பிறகு இதே துணையுடன் இஸ்ரேல் பலஸ்தீனத்தின் எஞ்சிய பகுதிகளையும் கபளீகரம் செய்து கொண்டது.

palestine torture31967 ஜுனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவோடு எகிப்து, சிரியா, ஜோர்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆதிக்க வெறி கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் தான் கிழக்கு ஜெரூஸலத்தையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று முதல் பலஸ்தீன் அப்பாவி பொது மக்கள் மீது இஸ்ரேல் காட்டு மிராண்டித் தனத்தை கட்டவிழ்த்து விட்டதோடு மட்டுமன்றி தனது யூத மயமாக்கல் திட்டத்தையும் வெறியோடு முன்னெடுத்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் இருந்து அழைத்து வரப்பட்ட யூதர்களுக்கான விஷேட குடியிருப்பு திட்டங்களையும் அது நிறுவத் தொடங்கியது.

1980ல் கிழக்கு ஜெரூஸலத்தை இஸ்ரேல் சர்வதேச கண்டனங்களையும் பொருட்படுத்தாமல்; கபடத்தனமாக தன்னோடு இணைத்துக் கொண்டது. படிப்படியாக அதன் மாநகர எல்லைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனது சட்டங்களின் கீழான ஒரு பிரதேசமாகவும் மாற்றிக் கொண்டது. ஆனால் இந்த மாற்றங்கள் எதுவுமே செல்லுபடி அற்றவை என்றும் சட்ட விரோதமானது என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் அன்றைய காலப்பகுதியிலேயே நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவும் ஜெரூஸலமும்

1990ல் அமெரிக்க செனட் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. “இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ஏற்றுக் கொள்வது” என்பதுதான் அந்தத் தீர்மானம். “ஜெரூஸலம் பிரிக்கப்படாத ஒரு நகரமாக இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்தத் தீர்மானம்.

எவ்வாறேனும் 1991இல் அப்போதைய அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் பெக்கர் “ இஸ்ரேல் கிழக்கு ஜெரூஸலத்தை இணைத்துக் கொள்வதை எதிர்ப்பதாகவும் இஸ்ரேலிய சட்டங்களை அந்தப் பிரதேசத்தில் அமுல் செய்வதை எதிர்ப்பதாகவும் அதன் மாநகர எல்லைகள் விஸ்தரிப்பை எதிர்ப்பதாகவும்” குறிப்பிட்டார். வரலாற்று ரீதியாக கிழக்கு ஜெரூஸலத்தை அமெரிக்கா ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியாகத் தான் பார்த்துள்ளது.

கிளின்டன் நிர்வாகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாக கிழக்கு ஜெரூஸலத்தை வகைப்படுத்த மறுத்தது. இறைமை மிக்க உள்ள ஒரு பகுதியாகவே அதை கருதியது. உப ஜனாதிபதி அல்கோர் இஸ்ரேலின் தலைநகராக ஐக்கிய ஜெரூஸலம் அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானங்களின் போதும் கிழக்கு ஜெரூஸலம் பற்றிய வார்த்தை பிரயோகங்களின் போதும் மிக அவதானமாகவே இருந்து வந்துள்ளது.

1995இல் ஜெரூஸலம் தூதரக சட்டம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. ஜெரூஸலம் பிரிக்கப்படாத நகரமாகவும் அது இஸ்ரேலின் தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம்.

ஜெரூஸலத்தை விடுவிக்க முஸ்லிம் நாடுகள் குறிப்பாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் செய்தது என்ன? இந்தப் பிரச்சினை தொடங்கி ஐம்பதுக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இந்த நாடுகள் எதுவுமே செய்யவில்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வர வேண்டியுள்ளது.

வறுமையில் வாடும் மொரோக்கோவின் தலைநகர் கஸப்லங்காவில் கோலாகலமான ஒரு மாநாடு கூடி இஸரேல் கிழக்கு ஜெரூஸலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது தான் அவர்கள் செய்த ஒரே காரியம். இந்த வெற்றுக் கோஷங்கள் தமது சொந்த மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் என்பதை இஸ்ரேலும் அதன் அமெரிக்க ஐரோப்பிய பங்காளர்களும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அமெரிக்காவால் தூண்டப்பட்ட ஈராக் படைகளால் 199091 குவைத் நாடகம் அரங்கேற்றப்படும் வரை இந்த ஏமாற்று நிலை நீடித்தது.

அன்று முதல் இஸ்ரேலும் அதன் நாசகார பங்காளிகளும் இணைந்து மத்திய கிழக்கு முழுவதையும் கொலைகளமாக மாற்றிவிட்டனர். இன்று அந்தப் பிராந்தியத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்து எல்லா நாடுகளையும் இன்று கட்டாந்தரையாக்கிவிட்டனர். இந்த நாடுகளின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் எண்ணற்றவர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது தமது சொந்த இருப்புக்காக போராடும் அரபு சர்வாதிகாரிகள் பலஸ்தீனத்தை முற்றாகக் கைகழுவி விட்டனர்.

பிராந்தியத்தின் இந்தக் கொந்தளிப்பு நிலையை பயன்படுத்தி யூதர்களுக்கு மட்டுமான தனது குடியிருப்புத் திட்டத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இவை சட்ட விரோதமானது என்பதை நன்கு அறிந்தும் அமெரிக்காவும் ஐரோப்பாவையும் தமது பூரண ஆதரவை இந்த சட்ட விரோத குடியேற்றத் திட்டத்துக்கு வழங்கி வருகின்றன. அத்தோடு மட்டுமன்றி புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அந்தப் புனித பூமியையும் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றது.

உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் புனித மஸ்ஜிதுல் அக்ஸா பிரதேசத்தை சியோனிஸ சக்திகளின் பிடியில் இருந்து விடுவிக்க முன்வரவேண்டும் என்ற உருக்கமான கோரிக்கையை அந்தப் பள்ளிவாசலின் இமாம் ஷேக் எக்ரிமா சாத் சப்ரி 1998 நவம்பர் 16ல் பஹ்ரேனில் வைத்து விடுத்துள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கதாகும்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களை சொர்க்கத்தை நோக்கிய பயணத்துக்காக அழைத்த அன்றைய தினத்தில் இருந்தே இறைவன் மஸ்ஜிதுல் அக்ஸாவை புனித பூமி ஆக்கிவிட்டான். இப்போது அந்த இடம் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. அதைக் காப்பாற்றத் தவறினால் அது பாரிய அழிவை சந்திக்கும். சியோனிஸ திட்டங்களின் படி எதிர்காலத்தில் புனித மக்கா மதீனா ஆகிய இடங்களும் ஆபத்தை எதிர் நோக்க வேண்டியிருக்கும்” என்று அன்றைய தினம் அவர் எனக்களித்த ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

மஸ்ஜிதுல் அக்ஸா தானாகவே இடிந்து விழும் வகையில் மிக நுட்பமாகத் திட்டமிட்டு இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இஸ்லாமிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த ஏனைய கட்டிடங்களின் நிலையும் இதுவே தான். ஏற்கனவே ஒவ்வொன்றாக இடிந்து விழும் நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது.

எனவே இந்த நகரை யூத இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சகல முஸ்லிம்களினதும் மார்க்க கடமையாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு ஷேக் இக்ரிமா அன்றே உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார். ஆனால் அரபு சர்வாதிகார ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் இந்த வேண்டுகோள் இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இன்று நிலைமைகள் மிகவும் மோசம் அடைந்துள்ளன. அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிப்பதை தடுக்க அன்றாடம் இஸ்ரேல் பல உத்திகளைக் கையாண்டு வருகின்றது. பலஸ்தீனர்களுள் 55 வயதுக்கு மேற்பட்ட திருமணமான ஆண்களும் 45 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்களும் தான் பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்கலாம் என்று வினோதமான தடைகளை விதித்து வருகின்றது. எனவே இங்கு மக்கள வருவது குறிப்பாக பலஸ்தீனர்கள் வருவது புனித றமழான் மாதத்தை தவிர ஏனைய காலங்களில் கணிசமாகக் குறைந்துள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்ற முயன்று வருகின்றார். இந்த முயற்சி எதிர்வு கூற முடியாத பாரிய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக பாரிய உயிர் இழப்புக்களை எற்படுத்தும் ஒரு முயற்சியாக இது அமையக் கூடும்